ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும்.'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.
பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?பல் மருத்துவர் செந்தில் குமரன் விரிவாக ஆலோசனை தருகிறார்.
பல்லின் அமைப்பு...
"பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு மொத்தம் 32 பற்கள் உள்ளன.
'பல் போனால் சொல் போகும்'என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவைபற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு.உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும்.
பற்களை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது?
பற்களை சுத்தமாக வைத்திருக்க சில செயல்களை தினசரி பின்பற்றவேண்டும். அவை,
* தினசரி காலை எழுந்தவுடன்,இரவு உணவுக்குப்பின்பல் துலக்க வேண்டும்.
* எப்போது சாப்பிட்டாலும், வெந்நீர் அல்லது கல்லுப்பு கலந்த வெந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* பற்களைத் துலக்கும் முன் பிரஷை, குழாயைத் திறந்துவிட்டு நேரடியாகத் தண்ணீரில் கழுவ வேண்டும். கப்பில் பிடித்துவைத்த நீரில் கழுவக்கூடாது.
செய்யக்கூடாதவை!
* நீண்ட நேரம் பற்களைத் தேய்க்கக் கூடாது. அழுத்தியும் தேய்க்கக்கூடாது.
* இனிப்புகள், குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை அதிகமாக உட்க்கொள்ளக்கூடாது.
* தூங்கி எழுந்ததும் பல் துலக்காமல் காபி, பால் போன்றவற்றைப் பருகக்கூடாது. இவை, பற்களில் உள்ள உணவுத் துணுக்குகளை வயிற்றுக்குள் கொண்டு சென்று விடும்.அதனால் பல வயிற்று உபாதைகள் ஏற்படும்.
* கடினமான பொருள்களை கடிக்கக்கூடாது. பற்களை, குளிபானங்களைத் திறக்கும் ஓப்பனர்களாகப் பயன்படுத்தக்கூடாது.
* புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
பல் துலக்கும் முறை...
பற்களை துலக்கும்போது, பிரஷைமேலும் கீழுமாக தேய்க்க வேண்டும். பக்கவாட்டில் தேய்ப்பது பல்லில் உள்ள எனாமலை நீக்கிவிடும். மேலும், நீண்ட நேரம் பற்களைத் தேய்க்கக்கூடாது. பிரஷை45 டிகிரி கோணத்தில் வைத்துத் தேய்க்க வேண்டும். முன்னே இருக்கும் பால் பற்களையும்பக்கவாட்டில் உள்ள அரவைப் பற்களையும்இரண்டுமுறை மேலும் கீழுமாகத்தேய்க்க வேண்டும்.கடவாய்ப் பற்களை ரொட்டேசன் முறை எனப்படும் சுற்றித் தேய்க்கும் முறையில் துலக்க வேண்டும். பற்களின் உட்புறமாகவும் தேய்க்க வேண்டும். அல்ட்ரா சாஃப்ட், சாஃப்ட் மற்றும் மீடியம் பிரஷ்களைக் கொண்டு பல் துலக்கலாம். கடினமான பிரஷைத்தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்துப் பல் துலக்கக் கூடாது.
பிரஷ் செல்லமுடியாதஇடத்தில், பற்களுக்கு இடையே உள்ள கிருமிகள் மற்றும் உணவுத் துணுக்குகளை மெல்லிய நூல் வடிவில் உள்ள டென்டல் ஃப்ளாஸ் (Dental Floss) மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பற்களைச் சுத்தம் செய்வதுபோல் நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம். பிரஷின் பின்புறம் இருக்கும் டங்க் கிளீனர் (Tongue Cleaner) பயன்படுத்தி மெதுவாக நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக மவுத்வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
வாய் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்கள்...
பல் சொத்தை, பற்கூச்சம், பல் வலி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம், வாய்ப் புற்றுநோய் போன்றவை பற்களில் ஏற்படும் பொதுவான நோய்கள்.
பல் சொத்தை
காரணம்: நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல்சொத்தை ஏற்படும். எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரண்டும்சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும்.
தீர்வு: பல் சொத்தை உள்ளது என்று தெரிந்த உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ஃபில்லிங் மெட்டீரியலைக் கொண்டு அடைத்தல், ஆர்சிடி (Root Canal Treatment) என்னும் வேர் சிகிச்சை மூலம் பல் சொத்தையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யலாம். பல் சொத்தை அதிகமாக இருந்தால் அந்த பல்லை அகற்ற வேண்டும். இதனால், அடுத்தப் பல்லுக்குப் பரவுவது தடுக்கப்படும். அகற்றிய பல்லுக்குப் பதிலாக செயற்கை பற்களைப் பொருத்திக்கொள்ளலாம்.
தவிர்க்க: இனிப்பு சாப்பிடுவதால் மட்டும்தான் பல் சொத்தை உண்டாகும் என்றில்லை. எந்த வகை உணவாக இருப்பினும் அதை உண்ட பின்னர் அந்த உணவுத் துகள்கள் பற்களில் படியாதவாறு வாயைக் கொப்பளித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைப் பின்பற்றினால் பல் சொத்தை ஏற்படாது தடுத்துவிடலாம்.
பல் கறைகள்
காரணம்: புகையிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது, மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காததுபோன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும். சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்.
தீர்வு: நல்ல தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும். வொயிட் க்ளீனர் எனக்கூடிய பற்களை வெண்மையாக்கும் முறையை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துகொள்ளலாம்.
தவிர்க்க: மது மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
பல் வலி
காரணம்: பல் சொத்தை வளர்ந்து பெரிதாகும்போது பல்லின் வேரைத் தாக்கும். அப்போது பல் வலி ஏற்படும்.
தீர்வு: பல் வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றால் பல்வலி ஏற்படலாம்.அந்த தருணத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கமுயற்சிக்க வேண்டும்.
தவிர்க்க: தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல்லுப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.
வாய்ப்புற்றுநோய்
காரணம்: புகைப்பிடித்தல், பான்மசாலா, புகையிலை போன்றவற்றை வாய்க்குள் நீண்ட நேரம் வைத்திருப்பதால் 'ஓரல் கேன்சர்' எனப்படும்வாய்ப்புற்றுநோய் உண்டாகும். ஆரம்பத்தில் வாயின் உள்பகுதியில் புண் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என பல பகுதிகளைத் தாக்கவும் வாய்ப்புண்டு.
தீர்வு: ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது, புகைப்பழக்கம்,புகையிலைப் பழக்கத்தை தவிர்த்தல் போன்ற செயல்களின் மூலம் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும். மருத்துவரின் ஆலோசனை பெற்று, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
தவிர்க்க: புகையிலை, பாக்கு போன்ற பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வாய் துர்நாற்றம்
காரணங்கள்: வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப்பிரச்னை இருக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
தீர்வு: மவுத் வாஷர்திரவங்களை பயன்படுத்தி, வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். தினசரி காலையில் வெதுவெதுப்பான நீருடன் உப்பு சேர்த்துவாய் கொப்புளிக்க, வாய் துர்நாற்றம் போகும். அல்சர் உள்ளவர்கள், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றில் நீர் இருந்தால் அமிலங்களின் தாக்கம் குறையும்.
தவிர்க்க: காலை, இரவு என இரு வேளைகளும்பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை நீக்க, நூலை வைத்து சுத்தப்படுத்தும் பழங்கால முறையை பின்பற்றலாம். அதிகப் புளிப்பு மற்றும் அதிகக் கார உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை உண்ட பின்பு, பல்துலக்க வேண்டும். இவற்றையும் தாண்டிதுர்நாற்றம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ஈறுகளில் வீக்கம்...
காரணம்: பற்கள் மீது பாக்டீரியாக்கள் படிவதால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். முறையாக பற்களைப் பராமரிக்காவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஈறுகள் வீங்கிவிடும்.வைரஸ் கிருமி தொற்று, மனஅழுத்தம், சர்க்கரைநோய், குடிப்பழக்கம், புகையிலைப் பழக்கம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்.
தீர்வு: மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவரது ஆலோசனையைப்பின்பற்றவேண்டும். நோய்களால் ஈறுகளில் வீக்கம் ஏற்படின், அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
தவிர்க்க: தினசரி அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிக அளவு குடிக்காமல், சிறிது இடைவெளி விட்டு சிறிது சிறிதாக குடிக்கலாம்.இளஞ்சிவப்பு அல்லதுபிங்க் நிறத்தில் ஈறுகள் இருப்பின் அவை ஆரோக்கியமானதாகும். கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஆரோக்கியம் தான். அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஈறுகள் பாதிப்படைந்துள்ளன என்று புரிந்து கொள்ளலாம்.
பற்கூச்சம்
காரணம்: எனாமல் தேய்வதாலும், அதிகக்குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும்பற்கூச்சம் ஏற்படும்.
தீர்வு: தினசரி மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி, பிரஷ் மற்றும் பேஸ்ட்களைப் பயன்படுத்தலாம்.
தவிர்க்க: சாப்ட் அல்லது மீடியம் பிரஷ்ஷால் பல் துலக்கலாம். அழுத்தித் தேய்க்கக் கூடாது. வாயைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதிக அளவு சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகளின் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க...
* குழந்தைகளுக்குதினமும் ஒருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம், தண்ணீர் வைத்து பற்களைத் தேய்த்துவிட வேண்டும்.
* அதிக நேரம் பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை குழந்தைக்கு பழக்கப்படுத்தாதீர்கள்.
* சிலர், குழந்தைகளை பால் புட்டியை வாயில் வைத்தபடியேதூங்கவைப்பார்கள். அப்படி செய்வதால், பாலில் உள்ள இனிப்பானது பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து, குழந்தைகளின் பால் பற்களில்பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆகையால், இந்த பழக்கத்தைப் பெற்றோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
* 7 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் விரல்களைச் சூப்பினால், சீரான பல் வரிசை ஏற்படாது. எத்திய நிலையில், சீரற்று வளர்ந்துவிடும்.
* குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே, பெற்றோர்கள் அவர்களை பல் துலக்கப் பழக்க வேண்டும்.
* 12 வயது வரை குழந்தைகளுக்கு பால் பற்கள் விழாது இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, பல் பரிசோதனை செய்வது சிறந்தது.
பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்...
சிறுதானியங்கள், பிரவுன் பிரட், அரிசி, கோதுமை, நட்ஸ் போன்றவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை தினசரி உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால், பால் பொருள்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, முட்டை, சோயா போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். பல்லில் பிரச்னை இருக்கும்பட்சத்தில்இனிப்பு உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
தயிர், கீரை வகைகள், நட்ஸ், தேங்காய் போன்ற உணவுகள் பற்களுக்கு பலம் தரும். அதிலும், கேரட், ஆப்பிள் போன்றவற்றை நறுக்காமல் கடித்துச் சாப்பிடுவது சிறந்தது.
வெண்மையா, மஞ்சளா எது ஆரோக்கியம்?
வெண்மையோ, மஞ்சளோ எந்த நிறத்தில் இருந்தாலும் சுத்தமாக இருப்பதே பற்களுக்கு ஆரோக்கியம். பற்களின் நிறம் நம் தோலின் நிறத்தைப் பொறுத்து மாறுபடும். ஒயிட்னிங் மூலமாக, அதன் பொலிவை அதிகரிக்கலாம் தவிர, மஞ்சள் பற்களை முழுவதும் வெண்மையாக்க முடியாது. பல் மருத்துவரின் ஆலோசனைப்படி, பற்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள், பிரத்யேக பேஸ்ட், பிரஷ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
கர்ப்பகாலத்தில்!
கர்ப்பினிகளுக்கு சில சமயங்களில் ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு, பல் பாதிப்புகள் போன்றவை ஏற்படக்கூடும். இதற்குக் காரணம், ஹார்மோன் மாற்றங்கள். இப்படியான பல் பிரச்னைகள் கர்ப்பக்காலங்களில் ஏற்படின், உடனடியாக மருத்துவனை அணுகுவது நல்லது.
க்ளிப் அணிந்த பற்களுக்கு...
பல் வரிசையை சீர்செய்வதற்காக அணியப்படுவது க்ளிப். அதை அணிந்திருக்கும் காலகட்டத்தில் பற்களை கவனமாகப் பராமரிக்க வேண்டும். க்ளிப் அணிந்திருப்பவர்களுக்குப் பல் துலக்க பிரத்யேகமான ஆர்த்தோ பிரஷ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை, க்ளிப்புகளுக்கு இடையில் படிந்திருக்கும் சிறிய உணவுத் துகள்களை நீக்க உதவும். மேலும், க்ளிப் அணிந்திருப்பவர்கள் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவு மென்மையானதாக இருப்பது நல்லது.
சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல் வரிசையைச் சீராக்க க்ளிப்கள் அணிவிக்கிறார்கள். அவற்றை நிரந்தரப் பற்கள் முளைத்த பிறகு, மருத்துவரின் ஆலோசனை பெற்று, தேவைப்படும்பட்சத்தில் அணிவது நல்லது. ரிமூவபிள், ஃபிக்ஸ்ட் என இரண்டு வகையான க்ளிப்கள் உள்ளன.
பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!
* அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.
* சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.
* புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.
* குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால்பால் பற்களைப் பாதிக்கப்படும்.
* பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பதுபோன்ற செயல்களால்
பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.
* நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.
* சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
* குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவதுபற்கூச்சத்தை ஏற்படுத்தும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
* உணவு உண்ட பின்னும் குளிர்பானங்கள் அருந்திய பின்னும் ஃபுளூராய்டு டூட்பெஸ்ட் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இதில் உள்ள மினரல், பற்சிதைவில் இருந்து நம்மைக் காக்கும். வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும்.
* சாப்பிபிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக்கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்.
* 'பாயில் இன்ஃபெக்சன்' ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.
* ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூட் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
* பல் மற்றும் ஈறுக்களுக்கு இடையே பிளாக் (Plaque) என்னும் மஞ்சள் நிறக் கறைபடிந்து இருந்தாலோ பல் துலக்கும்போது அவற்றில் இருந்து ரத்தம் வந்தாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரை!
பொதுவாக பற்களில் வலி வந்தபிறகுதான் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்பதில்லை. பிரச்னைகள் இருந்தாலும், இல்லை என்றாலும், கட்டாயமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை அணுகி பற்களில் பாதிப்புஇருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்வதுஅவசியம். இது உங்களின் புன்னகையை மட்டுமல்ல உங்களின் தன்னம்பிக்கையையும் மெருகூட்டும்.